ரேசன்கடை
மானிய விலையில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்களை தமிழக அரசு ரேசன்கடை வழியாக வழங்கி வருகிறது.
அரசு இந்த பொருட்களுக்கு மானியம் தருவதற்கு காரணம் உண்மையாகவே பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.
ஆனால் போலி ரேசன்கார்டு, ரேசன் பொருட்கள் திருட்டு, ரேசன் பொருட்களின் எடை குறைவு, பொருட்கள் கிடைக்க வில்லை இது போன்ற செய்திகளை அன்றாடம் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
ஆதார் இணைப்பு
போலி ரேசன் கார்டுகளை கண்டுபிடித்து ஒழிப்பதற்காக ரேசன்கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணையும் பதிவு செய்தால்தான் ரேசன் பொருட்களை வாங்க முடியும் என்று அரசு அறிவித்தது.
ஆனால் லட்சக்கணக்கான ரேசன் கார்டுகளில் இன்னும் ஆதார் இணைக்கப்பட வில்லை. ஆக அவையெல்லாம் போலி என்று முடிவாகிவிட்டன. இந்த ஆதார் இணைப்பு உத்தரவு அரசிற்கு நல்ல பலனை தந்தது.
ஸ்மார்ட் ரேசன் கார்டு
அடுத்ததாக 1 கோடி குடும்பங்களுக்கு ஸ்மார்ட் ரேசன்கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு நாம் வாங்கிய ரேசன் பொருட்களின் விவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பபடுவதால், நம் கார்டை பயன்படுத்தி கடைகாரர்கள் தவறு செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
மேலும் TNPDS செயலி மூலம் கடையில் எந்தெந்த பொருட்கள் எவ்வளவு இருப்பு உள்ளது, கடையின் வேலை நேரம், அன்றாடம் வழங்கப்படும் பொருட்களின் விவரங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளமுடிவதால் நாம் ஏமாற வாய்ப்பில்லை.
புதிய உத்தரவு
தற்போது அரசு ரேசன்கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகையையும் ரேசன்கடையில் பதிவு செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவிட்டுள்ளது.
எனவே ரேசன்கடைகளில் விரல் ரேகை வைக்கும் எந்திரங்களை வாங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 3 மாதத்திற்குள் இந்த பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
என்ன பயன்?
இவ்வாறு அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ரேகையையும் பதிவு செய்வதன் மூலம் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாரும் பொருட்களை வாங்க முடியாது.
வசதியானவர்கள் தங்களுக்கு தேவையில்லாத பட்சத்தில் ரேசன்கார்டை தம்மிடம் வேலை பார்ப்பவர்களிடமோ, உறவினர்களிடமோ கொடுத்து வாங்கிக்கொள்ள செய்கின்றனர். இனி இது முடியாமல் போகும்.
ரேசன் பொருட்கள் உண்மையாக தேவைப்படும் குடும்பங்கள் மட்டுமே நேரில் வந்து வாங்கிக்கொள்வார்கள்.
எனவே நாம் அடுத்து வரிசையில் நிற்கப்போவது ரேசன்கடையில் என்று தெரிந்து விட்டது.
இந்த பதிவை உங்கள் நட்புகள் மற்றும் உறவுகளுக்கு கீழே உள்ள சமூக வலைதளங்களில் பகிருங்கள். நன்றி.