குருப்பெயர்ச்சி 2018 – 2019
கும்பம்
கும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்
பலன்கள் யாருக்கு நடக்கும்
பலன்கள் யாருக்கு நடக்காது
குருப்பெயர்ச்சி பலன்கள்
கும்பம் ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் குருவுக்கு சிறப்பான இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
குரு நிற்க போவது – பத்தாமிடம் – (விருச்சிகம்)
குருவின் ஐந்தாம் பார்வை – இரண்டாமிடம் – (மீனம்)
குருவின் ஏழாம் பார்வை – நான்காமிடம் – (ரிசபம்)
குருவின் ஒன்பதாம் பார்வை – ஆறாமிடம் – (கடகம்)
இந்தக் குருப் பெயர்ச்சி உங்கள் வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் தேக்கம், மந்தநிலை, தடைகள் போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதோடு அலைச்சல்களையும், தூரப் பயணங்களையும் உண்டாக்கும்.
கும்பம் ராசிக்கு அதிர்ஷ்டம் குறைவான நேரம் இது. உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால், உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.
செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளிப் போகலாம். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும்.
எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும். அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது நன்மையைத் தரும்.
அரசு, தனியார் துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.
கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்கு வழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப் பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
குருப்பெயர்ச்சி நிகழும் நாள்
-
வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)
-
திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)
குருவின் சுப பார்வையானது, கும்பம் ராசியினருக்கு இரண்டு, நான்கு, ஆறு ஆகிய இடங்களில் விழுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.
குருவின் பார்வை இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் குடும்பத்தில் சந்தோஷமும், மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தன காரகனான குரு தன ஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது.
குருவின் நான்காமிடப் பார்வையால் நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து உங்களின் வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ, வாங்கவோ செய்வீர்கள். இந்தக் குருப் பெயர்ச்சி உங்களை கடன்காரராக்கி அதன் மூலம் ஒரு சொத்து சேர்க்க வைக்கும்.
அம்மா வழி உறவினர்களுடன் சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார் வழி சொத்துகள் தற்போது கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு.
குருபகவான் நான்காமிடத்தை பார்க்கப் போவதால் மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். தெரிந்த கேள்விதான் கேட்பார்கள் என்பதால் பரீட்சை எழுதுவற்கு சுலபமாக இருக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.
குருவின் பார்வை ஆறாமிடத்தில் பதிவதால் தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரியங்களுக்காகவோ கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும்.
மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச் செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும்.
உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம்.
சொத்துத் தகராறுகளோ வழக்கு விவகாரங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்னைகளாலும் கோர்ட் போலீஸ் என அலைய நேரிடலாம். ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்கு இருப்பவர்கள் தீர்ப்பு வரும் நாள் பக்கத்தில் இருந்தால் அதைக் கொஞ்சம் தள்ளிப் போட முயற்சிப்பது நல்லது. போலீஸ், கோர்ட் வழக்கு போன்றவை இன்னும் சில மாதங்களுக்கு சாதகமாக இருக்காது.
அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம்.
மேலும் சில முக்கிய பலன்கள்
வயதானவர்கள் உடல் நலத்தில் கண்டிப்பாக அக்கறை வைக்க வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.
யூகவணிகம், பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி போன்றவைகளில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த குருப் பெயர்ச்சியால் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும்.
யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். இளைய சகோதர சகோதரிகளுக்கு இந்த வருடம் உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு.
யாரையும் நம்ப வேண்டாம். பொருட்கள் திருட்டு போவதற்கோ நீங்கள் கை மறதியாக எங்காவது வைத்த பிறகு தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது. கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
கும்பம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தற்போது தள்ளிப் போடுவது நல்லது.
யாருக்கு பலன்கள் நடக்கும்?
இது மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், கும்பம் ராசியில் பிறந்த அனைவருக்கு நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக இன்னொரு விசயத்தையும் சொல்லலாம்.
கும்பம் ராசியில் பிறந்த அன்பர்களின், ஜாதகத்தில், பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை முழுதும் பொருந்தும் பொது உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நிச்சயம் நடக்கும். இல்லையேல் பலன்கள் நடக்கும்படி வந்து கை நழுவி போகும். அதாவது கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் போகும்.
பலன்கள் நடக்க தேவையான அமைப்பு
(அவரவர் சுய ஜாதகத்தில்)
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்
- சுய ஜாதக லக்ன சுபர்கள் இருப்பின், நன்மை துரிதமாக அதிகமாக நடக்கும், மிகவும் திருப்தி அடைவீர்கள்
- சுய ஜாதக லக்ன அசுபர்கள் இருப்பின், நன்மையானது தடை, தாமதித்திற்கு பின் நடக்கும். திருப்தி அடையமாட்டீர்கள்
- சுய ஜாதக லக்ன சமர்கள் (சம கிரகங்கள்) இருப்பின், நன்மையானது சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்கும். திருப்தியும் அடைவீர்கள்
- விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
- மீனத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு ஆட்சி தன்மையானது இருக்கும்.(சுய விருப்பத்துடன், யாருக்காகவும் அல்லாமல், மனதார ஒரு விஷயம் செய்வது போல)
- ரிஷபத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு பகை தன்மையானது இருக்கும்.(பிடிக்காத நிலையில், வேறு வழியின்றி, ஒரு விஷயம் செய்வது போல)
- கடகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
- உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்காவது, குரு மகாதிசையோ, குரு புத்தியோ நடந்தால், பலன்கள் இரட்டிப்பு ஆகும்.
யாருக்கு பலன்கள் நடக்காது?
- உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் ஆகிய இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ செய்யபோவதில்லை என்பதினை மனதில் நன்கு பதிய வையுங்கள்.
இறைவழிபாடு
உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை பொறுத்து இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.
மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு – செவ்வாய்க்கிழமை
ரிஷபம் அல்லது துலாமில் குரு – வெள்ளிக்கிழமை
மிதுனம் அல்லது கன்னியில் குரு – புதன்கிழமை
கடகத்தில் குரு – திங்கட்கிழமை
சிம்மத்தில் குரு – ஞாயிற்றுக்கிழமை
தனுசு அல்லது மீனத்தில் குரு – வியாழக்கிழமை
கும்பம் அல்லது கும்பத்தில் குரு – சனிக்கிழமை
வழிப்பாட்டு ஸ்தலங்கள்
- திருச்செந்தூர் முருகன் கோயில்
- ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.
குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு, மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)
*********************************
கும்பம் ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ
https://youtu.be/0wEzT_u78v4
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் குரு பெயர்ச்சி மற்றும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர்
ஜோதிட ஆச்சார்யா
பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN
(M.M.சந்திர சேகரன்)
89730-66642, 70102-92553
(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
*********************************