Contents
குருப்பெயர்ச்சி 2018 – 2019
கடகம்
கடகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்
பலன்கள் யாருக்கு நடக்கும்
பலன்கள் யாருக்கு நடக்காது
குருப்பெயர்ச்சி பலன்கள்
கடகம் ராசிக்கு இதுவரை சாதகமற்ற நிலையில் இருந்து வந்த குருபகவான் இப்போது மிகவும் முன்னேற்றமான நல்ல பலன்களை தரக் கூடிய ஐந்தாமிடத்திற்கு மாறி உங்களுக்கு அளவற்ற சந்தோஷங்களை தரப் போகிறார்.
குரு நிற்க போவது – ஐந்தாமிடத்தில் – (விருச்சிகம்)
குருவின் ஐந்தாம் பார்வை – ஒன்பதாமிடத்தில் – (மீனம்)
குருவின் ஏழாம் பார்வை – பதினோராமிடம் – (ரிசபம்)
குருவின் ஒன்பதாம் பார்வை – ராசியில் (முதலிடம்) – (கடகம்)
இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக் குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது.
உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.
இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் உடனடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். குருபகவான் ராசியைப் பார்க்க போவதால் உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.
தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப் புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.
வேலை செய்யும் இடத்தில் அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இருக்காது. பதவி உயர்வு கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும்.
வேலை செய்பவர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். தடைகள் அனைத்தும் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.
திருமணம்
திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள். முதல் வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றி கோர்ட், போலீஸ் என்று அலைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நல்லவிதமாக செய்ய முடியும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.
கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. நெருங்கிய உறவினர்களை இழந்து மனவேதனையில் வாடியவர்கள் புதிய உறவுகள் ஏற்பட்டு புது மனிதர்களாக பிறவி எடுப்பீர்கள். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் அருமை பெருமைகளை உணர்ந்து உங்களின் சொல்லைக் கேட்பார்கள்.
இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்ல படியாக உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களை எதிரியாக நினைத்தவர் உங்களை சரண் அடைவர்.
குருப்பெயர்ச்சி நிகழும் நாள்
- வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)
- திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)
குருவின் சுப பார்வையானது, கடகம் ராசியினருக்கு ஒன்பது, பதினொன்று மற்றும் ராசியில் ஆகிய இடங்களில் விழுகிறது. இதனால் மேற்சொன்ன குறிப்பிட்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.
ஐந்தாமிடக் குருவினால் குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாக செய்ய முடியும். நீண்ட நாட்களாக தள்ளி போய் இருந்த குலதெய்வ தரிசனம் இப்போது பெற முடியும். இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரியும் சந்தர்ப்பம் வரும்.
ஞானிகள் மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.
இதுவரை இருந்துவந்த வீண் செலவுகளும் விரயங்களும் தவிர்க்கப்பட்டு சேமிப்பு கண்டிப்பாக இருக்கும். இனிமேல் குறிப்பிடத் தக்க அளவில் பண வரவும் லாபங்களும் இருக்கும் என்பதால் நினைத்த இடத்தில் நல்ல வகையில் முதலீடு செய்யமுடியும். பங்குச்சந்தை யூகவணிகம் போன்ற துறைகளில் லாபம் கிடைக்கும்.
குருவின் ஒன்பதாமிடத்து பார்வை மூலம் பாக்கிய ஸ்தானம் வலுப்பெறுவதால் தந்தை மூலம் லாபமும், தந்தை வழி சொத்துக் கிடைத்தலும், பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கங்கள் விலகுவதும் பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாத நிலையில் இருந்து வந்த தடைகள் நீங்குவதுமான நல்ல பலன்கள் நடைபெறும்.
மேலும் சில முக்கிய பலன்கள்
தகப்பனாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மகனுக்கு இடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிணக்குகள் நீங்கி தந்தையுடன் இணைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அப்பா நிறைவேற்றித் தருவார். நீங்களே ஒரு நல்ல தகப்பனாக உங்கள் குழந்தைகளுக்கு கேட்பதை செய்து தர முடியும்.
சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பெரியவர்கள், மதிப்புமிக்கவர்கள், அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும்.
குறிப்பிட்ட சிலருக்கு உயர்நிலை நட்பு கிடைக்கும் அதிகாரமிக்க பதவிகள் உண்டு. அரசியலில் ஏற்றங்கள் வரும். இப்போது கிடைக்கும் தொடர்புகள் மூலம் வரும் தேர்தலில் ஜெயிக்க முடியும்.
சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிதிலமடைந்து ஊருக்கு வெளியே கவனிப்பாரின்றி கிடக்கும் சிவன் கோவிலை புனருத்தானம் செய்யும் பாக்கியமும் அதன் மூலம் புண்ணியமும் கிடைக்கும். சிவன் அருள் கிடைக்க பெறுவீர்கள்.
குருவின் பதினொன்றாமிடப் பார்வையால் செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பண நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப் புழக்கம் இருக்கும்.
சிலருக்கு மூத்த சகோதரம் எண்ணப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன், அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.
குருவின் பார்வை ராசியில் விழுவதால், எப்பேர்ப்பட்ட துன்பங்களில் இருந்தும் உங்களை காத்து ரட்சிப்பார்.
யாருக்கு பலன்கள் நடக்கும்?
இது மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், கடகம் ராசியில் பிறந்த அனைவருக்கு நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக இன்னொரு விசயத்தையும் சொல்லலாம்.
கடகம் ராசியில் பிறந்த அன்பர்களின், ஜாதகத்தில், பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை முழுதும் பொருந்தும் போது உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நிச்சயம் நடக்கும். இல்லையேல் பலன்கள் நடக்கும்படி வந்து கை நழுவி போகும். அதாவது கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் போகும்.
பலன்கள் நடக்க தேவையான அமைப்பு
(அவரவர் சுய ஜாதகத்தில்)
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்
- சுய ஜாதக லக்ன சுபர்கள் இருப்பின், நன்மை துரிதமாக அதிகமாக நடக்கும், மிகவும் திருப்தி அடைவீர்கள்
- சுய ஜாதக லக்ன அசுபர்கள் இருப்பின், நன்மையானது தடை, தாமதித்திற்கு பின் நடக்கும். திருப்தி அடையமாட்டீர்கள்
- சுய ஜாதக லக்ன சமர்கள் (சம கிரகங்கள்) இருப்பின், நன்மையானது சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்கும். திருப்தியும் அடைவீர்கள்
- விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
- மீனத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு ஆட்சி தன்மையானது இருக்கும்.(சுய விருப்பத்துடன், யாருக்காகவும் அல்லாமல், மனதார ஒரு விஷயம் செய்வது போல)
- ரிஷபத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு பகை தன்மையானது இருக்கும்.(பிடிக்காத நிலையில், வேறு வழியின்றி, ஒரு விஷயம் செய்வது போல)
- கடகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
- உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்காவது, குரு மகாதிசையோ, குரு புத்தியோ நடந்தால், பலன்கள் இரட்டிப்பு ஆகும்.
யாருக்கு பலன்கள் நடக்காது?
- உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் போன்ற இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது, இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ செய்யபோவதில்லை என்பதினை மனதில் நன்கு பதிய வையுங்கள்.
- உங்கள் ராசி மேல் குரு பார்வை விழுவதால், நிச்சயமாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மை செய்யாமல் போகாது (மற்ற இடங்களான விருச்சிகம், மீனம், ரிஷபம் போன்ற இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போதும்)
இறைவழிபாடு
உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை பொறுத்து இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.
மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு – செவ்வாய்க்கிழமை
ரிஷபம் அல்லது துலாமில் குரு – வெள்ளிக்கிழமை
மிதுனம் அல்லது கன்னியில் குரு – புதன்கிழமை
கடகத்தில் குரு – திங்கட்கிழமை
சிம்மத்தில் குரு – ஞாயிற்றுக்கிழமை
தனுசு அல்லது மீனத்தில் குரு – வியாழக்கிழமை
மகரம் அல்லது கும்பத்தில் குரு – சனிக்கிழமை
வழிப்பாட்டு ஸ்தலங்கள்
- திருச்செந்தூர் முருகன் கோயில்
- ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.
குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு, மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)
*********************************
கடகம் ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ
https://youtu.be/CrASLp8hGpE
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் குரு பெயர்ச்சி மற்றும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர்
ஜோதிட ஆச்சார்யா
பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN
(M.M.சந்திர சேகரன்)
89730-66642, 70102-92553
(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************